46 ஆண்டு சிறை, தூக்கு: தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து முழு விவரம்
பல்வேறு செக்ஷன்களுக்கு 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மரண தண்டனையும் தனித்தனியாக நீதிபதி அளித்துள்ளார். தண்டனை விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. தஷ்வந்த் சாதாரண மென் பொறியாளர். வயது 24 தான் ஆகிறது. தஷ்வந்த் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி உடலை மறைக்க உடலை சாக்குப்பையில் போட்டு எடுத்துச் சென்று அருகில் உள்ள பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். கொலை, பாலியல் வன்கொடுமை, தடயங்களை மறைத்தல், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போஸ்கோ சட்டம் 6, 8-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேரடியான சாட்சிகள் இல்லாவிட்டாலும் விஞ்ஞானப் பூர்வமாக வழக்கை நிரூபித்து தண்டனை பெற்று தந்துள்ளனர். ஹாசினியின் உடல் முழுதாக கிடைக்காத நிலையில் அவரது மண்டை ஓடு மட்டும் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது. அதை டி.என்.ஏ சோதனை மூலம் ஹாசினி என்று நிரூபித்தனர்.
ஹாசினியின் உடையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரமாக தஷ்வந்தின் உயிரணு திரவ மாதிரி கைப்பற்றப்பட்டது. தஷ்வந்த் சாக்குப்பை எடுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவு, தஷ்வந்த் உடல் எரித்த இடத்தை அடையாளம் காட்டியது, மண்ணெண்ணெய் வாங்கியதைப் பார்த்த சாட்சி உள்ளிட்ட பல சந்தர்ப்ப சாட்சியங்களே இந்த வழக்கின் உயிர் நாடி.
இந்த வழக்கில் ஹாசினி தரப்பில் வழக்கறிஞர் கண்ணதாசன் 48 முக்கிய பாயிண்டுகளை வைத்து ஏன் தஷ்வந்துக்கு தண்டனை அளிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார். 30 சாட்சியங்கள், 19 பொருள் சார்ந்த ஆவணங்கள் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். தனது தீர்ப்பில் கொடூரமான இது போன்ற ஆட்கள் வெளியில் விடப்படக்கூடாது என்று பதிவு செய்துள்ளார். ஆரம்பத்திலேயே தனது குற்றத்தை மறுத்த தஷ்வந்த் தனக்கு குறைந்தபட்சத்தண்டனை அளிக்கும் படி கேட்டுள்ளார். பின்னர் தன்னால் அபராதம் கட்டமுடியாது அதனால் அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதனால் தான் தஷ்வந்துக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
தீர்ப்பு விவரம்:
பிரிவு 363-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள், பிரிவு 366-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறையும், பிரிவு 354/3-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தடயங்களை மறைத்ததற்காக பிரிவு 201-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு 7 ஆண்டுகளும், மொத்தம் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இது தவிர கொலைக்குற்றத்திற்காக 302 வது பிரிவின் கீழ் உச்சப்பட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டம் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7-ன் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு 6-க்கு 10 ஆண்டுகளும், பிரிவு 7-க்கு 5 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 31+15 என 46 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டாலே அதை இன்னொரு நீதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தானாக வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்று விடும்.
139 பக்கம் அடங்கிய தீர்ப்பின் நகல், விதிப்படி தஷ்வந்துக்கு வழங்கப்பட்டது. உயர்ந்தபட்ச தண்டனையை அடுத்து உடனடியாக தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
No comments:
Post a Comment